காங்கிரசில் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பி: பாஜகவில் சித்தாந்தம் இல்லை என்று குற்றச்சாட்டு

தேஸ்பூர்: அசாமின் தேஜ்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா காங்கிரசில் இணைந்தார்.

அசாமின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய், அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ரிபுன் போரா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் முன்னிலையில் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராம் பிரசாத் சர்மா காங்கிரசில் இணைந்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது, வேட்பாளர்கள் பட்டியலில் இவரது பெயர் இல்லை. அதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய ராம்பிரசாத் சர்மா, 2021ல் அசாமில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.

ராம் பிரசாத் சர்மா கடந்த 40 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்காக பணியாற்றியதாகவும், 1991 ல் கட்சியில் சேர்ந்ததாகவும் கூறினார். ஆனால் இப்போது கட்சிக்கு சித்தாந்தம் இல்லை என்றார்.

அசாமில், பாஜக இப்போது ஒரு கலப்பட கட்சியாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு என்று சித்தாந்தம் இல்லை. கட்சி ஆட்சியில் இல்லாத நேரத்தில் நான் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். 2021 ல் கட்சி ஆட்சிக்கு வரும் என்றார்.

அடிப்படையில் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரன ராம் பிரசாத் சர்மா தேஜ்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2014ல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.