டெல்லி: முன்னாள் கேப்டன் கபில்தேவ், லாக்டவுன் எதிரொலியாக தலையை மொட்டையடித்துக் கொண்டு வித்தியாசமாக காட்சி தருகிறார்.

கொரோனா வைரசானது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. உயிர்பலிகள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பொருளாதாரம் சரிந்து போயிருக்கிறது. இன்னும் பல நாடுகள் கொரோனா தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

லாக்டவுனால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள் பலர், வித்தியாசமான முறையில் காட்சி தர ஆரம்பித்துள்ளனர். சினிமா, விளையாட்டு என எந்த துறைகளில் இருந்தாலும் அவர்கள் லாக்டவுனால் ஏதோ ஒரு கட்டத்தில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

விராட் கோலி சில நாட்களுக்கு முன்னர் தான் வித்தியாசமான சிகையலங்காரத்தில் வலம் வந்தார். கேப்டன் விஜயகாந்துக்கு அவரது மனைவி சிகையலங்காரம் செய்தார். இதே லாக்டவுனால் மற்றொரு விளையாட்டு பிரபலம் தமது சிகையலங்காரத்தை மாற்றி பரவசப்படுத்தி இருக்கிறார்.

அவர் தான், இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முதலாக உலக கோப்பையை பெற்றுத் தந்த ஜாம்பவான் கபில்தேவ். எப்போது அழகான கேசத்துடன் வளைய வரும் அவர் இப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

வெண் தாடி, மீசையுடன், தலையை மொட்டைடியத்து இருக்கிறார். லாக்டவுன் காரணமாக, வீட்டில் இருக்கும் அவர் தமது, வித்தியாசமான ஸ்டைலுடன் காட்சி தரும் வகையில் இந்த கெட்டப்புக்கு மாறியதாக கூறி உள்ளார்.

மொட்டையடித்து, கண்ணில் கூலர்சுடன் முற்றிலும் வித்தியாசமான தோற்றம், பிரபல விளையாட்டு பத்திரிகையில் அசத்தலாக வெளி வந்து இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களுக்கும் புதிய அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.