மும்பை; பிரமாண பத்திரங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு, தேவேந்திர பட்னவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர முதலமைச்சராக அவசர பதவியேற்பு, 4 நாட்களில் முதலமைச்சர் பதவி ராஜினாமா என்று அரசியல் களத்தில் திடீர் சறுக்கலை சந்தித்து சர்ச்சைக்கு உள்ளானவர் தேவேந்திர பட்னவிஸ்.

இப்போது மற்றொரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். 2014ம் ஆண்டு நாக்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக வென்றார். ஆனால், அவர் மீது 1996, 1998 ஆகிய ஆண்டுகளில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றின் விவரங்களை பற்றி, தேர்தல் பிரமாணப்பத்திரங்களில் பட்னவிஸ் குறிப்பிடவில்லை என்று சதீஸ் உக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, மாஜிஸ்ரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர், மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தை நாடிய போது அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார் சதீஷ் உக். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை பட்னவிஸ் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

அதற்கான நோட்டீசும் பட்னவிசுக்கு அனுப்பப்பட்டது. போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து. பட்னவிசின் இல்லத்துக்கு சென்று சம்மன் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.