டெல்லி: காஷ்மீரை பார்வையிட வந்திருப்பது, பாசிச குழு என்று முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், காஷ்மீரில் அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் என்பதால், முன்னாள் முதலமைச்சகள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இயல்பு நிலை சீரடைந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.

அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரை பார்வையிட, ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு வந்திருக்கிறது. அக்குழுவினர் செவ்வாய்கிழமை ஜம்மு காஷ்மீரை பார்வையிடுகின்றனர். இந் நிலையில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இந்த குழுவின் வருகையை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பதாக கூறும் மத்திய அரசு, ராகுல் காந்தியை அனுமதிக்க மறுப்பது ஏன்?

அதற்கு பதிலாக தீவிர வலதுசாரி, பாசிச நகர்வு கொண்ட ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவுக்கு மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு, பாசிச எண்ணம் கொண்டிருந்தால் மட்டுமே காஷ்மீருக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.