ஜெகன் மோகன் அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 12 மணி நேரம் ‘மணல் மீட்பு’ போராட்டம்!

விஜயவாடா:

ந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக, முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 12 மணி நேரம்  மணல் மீட்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதனால், விஜயவாடாவாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களையும் ரத்து செய்து வருகிறது.

ஏற்கனவே கிருஷ்ணா நதிக்கரையில் விதிகளை மீறி கட்டியதாக சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான 8 கோடி மதிப்பிலான  பிரஜா வேதிகா என்ற சொகுசு பங்களாவை இடித்து தள்ளியது.  தற்போது மணல் விற்பனை குறித்து கொள்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி அரசை கண்டித்து,  தெலுங்குதேசம் கட்சி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மணல் மீட்பு  என்ற பெயரில் 12 மணி நேர போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு குதித்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் நிலவும்  மணல் பற்றாக்குறைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடுகின்றன. ஆளும் கட்சி மணல் கொள்ளை செய்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. நாமும் துஷ்பிரயோகம் செய்யலாம், ஆனால் நாங்கள் கண்ணியத்தை காத்து வருகிறோம். எங்களிடம்  துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள், அந்த நேரத்தை மணல் பற்றாக்குறையை சமாளிக்க பயன்படுத்துங்கள் என்று கூறி உள்ளார்.

சந்திரபாபு நாயுடு போராட்டம் காரணமாக விஜயவாடாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.