உச்சநீதி மன்ற தீர்ப்பு: காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வரவேற்பு

டில்லி:

டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேஷங்களில் துணைநிலை ஆளுனராக பதவி வகித்து வரும் மத்திய அரசின் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுக்கு  விரோதமாக செயல்பட்டு வருவது குறித்த வழக்கில்  இன்று உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்பதாக டில்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறி உள்ளார்.

இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பில், அரசியலமைப்பின்  சட்டப்பிரிவு  239 (ஏஏ) குறித்து விளக்கி உள்ளது தெளிவாக இருக்கிறது என்றும்,  அரசியலமைப்பின் 239 (AA) சட்டத்தின் படி, டில்லி ஒரு அரசு அல்ல, அது ஒரு யூனியன் பிரதேசம். இதுபோன்ற மாநிலங்களில் அரசும், துணைநிலை ஆளுநரும்  ஒன்றாக இணைந்து செயல்படவில்லை என்றால்  பிரச்சினைகள்தான் ஏற்படும் என்றும் கூறினார்.

மேலும்,  காங்கிரஸ் 15 ஆண்டுகளாக டில்லியை ஆட்சி செய்தது. அப்போது மாநில அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே எந்தவித மோதலும் ஏற்பட்டது இல்லை என்றும் தெரிவித்தார்.

டில்லி மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்

டில்லியில் ஆம்ஆத்மி அரசுக்கும், மாநில துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு பணிகள் ஏதும் நடைபெற வில்லை என்றும்,  அரசின் மக்கள் நல பணிகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு நல்க மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத்தின் தலைமைநீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

அரசியலைப்பு சட்டத்தின்படி துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்.

அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்தால் போதுமே தவிர அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசுக்கும் ஆளுநருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது.  துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. என அதிரடியாக தீர்ப்பளிக்கப்பட்டது

இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டில்லி மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வல் ஷீலா தீட்சித்தும் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.