முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி காலமானார்

கும்பகோணம்,

முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது  87.

திமுகவின் முன்னாள் உள்துறை அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான கே.சி.மணி உடல்நலம் இல்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று இரவு 9 மணி அளவில் சிகிசிசை பலனின்றி அவர் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

கோ.சி.மணி
கோ.சி.மணி

கோ.சி.மணி  1962 ம் ஆண்டு ஆடுதுறை தொகுதியிலும், 1989, 1996, 2001, 2006ம் ஆண்டுகளில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனிடையே, எம்.எல்.சி. உறுப்பினராகவும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

திமுகவில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 3 முறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் அமைச்சர் பதவியில் இருந்து திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆரம்ப காலத்தில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்து  செயலாற்றி வந்த, பின்னர் திமுகவில் இணைந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். திமுகவில் மாவட்டச் செயலர், மண்டலச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த இவர் கடைசியாக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக இருந்தார்.

கோ.சி.மணி 10 ஆண்டுகளாக  உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்த நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி அளவில் காலமானார். அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கோ.சி.மணிக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவருக்கு  சாவித்திரி, கிருஷ்ணவேணி என இரண்டு மனைவிகள். அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கோ.சி.மணியின் இறுதி சடங்கு அவரது   சொந்த ஊரான நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மேக்கிரிமங்கலத்தில் இன்று  (சனிக்கிழமை) மாலை நடைபெறவுள்ளது.