மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி: முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3ஆண்டுகள் சிறை

சென்னை:

னைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டுககொல்ல முயற்சி செய்த வழக்கில், திருவாரூர் தொகுதி  முன்னாள் திமுக எம்எல்ஏ அசோகனுக்கு நீதிமன்றம்  3ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவாரூர்  தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோகன். இவர் தனது மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தின ருடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு, சம்பவம் நடைபெற்ற நாளில், முழு போதையில் இருந்த அசோகன், தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு, மனைவி மற்றும் மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக அசோகன் மனைவி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அசோகன் மீது மிரட்டல், கொலை முயற்சி, அனுமதியின்றி துப்பாக்கியை பயன்படுத்துதல் உள்பட பல  பிரிவுகளின்  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி ஜெ.சாந்தி முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில், அசோகன் குற்றவாளி எனவும், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கோரிய நிலையில், அசோகன் மீதான தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.