விருத்தாசலம்:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் குழந்தை தமிழரசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை தமிழரசனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

விருத்தாசலம் முன்னாள் கழக சட்டமன்ற உறுப்பினரும், கழக தீர்மானக்குழுச் செயலாளருமான திரு. குழந்தை தமிழரசன் திடீரென மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும், பெரும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு, பல்வேறு கழகப் பொறுப்புகளிலும் கட்சிப் பணியாற்றி- பட்டி தொட்டிகளில் எல்லாம் கழகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தந்தவர்.
கழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நேரத்தில் தொகுதி மக்களின் குரலாகவும், அவர்களுக்கான நலத் திட்டங்களைப் பெற்று நிறைவேற்றிக் கொடுக்கும் பொதுநல ஊழியராகவும் திகழ்ந்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞரிடமும், என்னிடமும் பேரன்பு கொண்டவராக விளங்கிய திரு. குழந்தை தமிழரசன் அவர்கள், கழகம் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று கழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
கழகத்தின் தீரமிகு கொள்கை வீரர்களில் ஒருவரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன். எனக்கும், கழகத் தோழர்களுக்கும், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும் அவரது மறைவு பேரிழப்பாகும்.
திரு. குழந்தை தமிழரசனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குழந்தை தமிழரசன் மறைவு திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.