முன்னாள் பிரெஞ்ச் அதிபர் மோடியை திருடர் என்கிறார் : ராகுல் காந்தியின் அதிர்ச்சி தகவல்

டில்லி

முன்னாள் பிரெஞ்ச் அதிபர் ஹாலந்த் பிரதமர் மோடியை  திருடர் என குறிப்பிட்டதாக ஒரு தொலைகாட்சி நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதில் கடும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.    இந்த விமானங்கள் பராமரிப்பில் பிரதமரின் நண்பர் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட உள்ளது.    இது காங்கிரஸ் கூறுவதை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் “டைம்ஸ் நவ்” ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ முன்னாள் பிரஞ்ச் அதிபர் ஹாலந்த் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து ஒரு அறிக்கை அளித்துள்ளார்.   அதை நான் படிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் எங்களுக்கு சொல்ல எதுவும் இல்லை.    ரிலையன்ஸ் நிறுவனத்தை எங்களுக்கு இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது.    பராமரிப்பு பணிக்கான அனைத்து விவரங்களையும் இந்திய அரசு தானே பேசி முடித்து விட்டதாக தெரிவித்தது.    அதனால் நாங்கள் இந்திய பரிந்துரையை ஏற்றுக்கொண்டோம்.’

இதன் மூலம் இந்திய பிரதமர் ஒரு திருடன் என முன்னாள் பிரஞ்ச் அதிபர் கூறுவது நன்றாக தெரிய வந்துள்ளது.   தற்போது பிரதமர் மோடி ஹாலந்த் சொல்வது உண்மை என ஒப்புக் கொள்ள வேண்டும்.   அப்படி இல்லை எனில் ஹாலந்த் பொய் சொல்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும்.    இந்திய வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் பிரெஞ்ச் அதிபர் ஒருவர் நமது பிரதமரை திருடன் என கூறுகிறார்.

ஆகவே பிரதமர்  இது குறித்த உண்மைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.   இது பிரதமரின் கௌரவம் குறித்த பிரச்னை மட்டும் அல்ல.  நமது பாதுகாப்பு, ராணுவ வீரர்களின் எதிர்காலம் அனைத்தைப் பற்றியும் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் ஆகும்.

நான் இந்த விவகாரத்தில் பிரதமரின் மௌனத்தைக் கண்டு வியக்கிறேன்.   இது குறித்து ஒரு வார்த்தை கூட மோடி இதுவரை சொல்லவில்லை.   மோடியை திருடன் என்பவர் பிரஞ்ச் நாட்டின் முன்னாள் அதிபர்.  மோடியுடன் நேருக்கு நேர் ரபேல் ஒப்பந்ததம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியவர்.    அவர் இவ்வாறு கூறியதற்கு மோடியின் பதிலை உலகமே எதிர்நோக்குகிறது” என கூறி உள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த உரை மக்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.