சண்டிகர்:

ரியானா மாநிலத்தில், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர்  பூபேந்தர் ஹூடா தெரிவித்து உள்ளார். தங்களுக்கு  ஜனநாயக ஜனதா கட்சி, லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள்  ஆதரவு அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 21ந்தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  அங்கு, ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம்  கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

அரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பெரும்பான்மை பெறாத நிலையில் இழுபறி நீடித்து வருகிறது.

மதியம் 2.30 மணி நிலவரப்படி, அங்கு பாரதிய ஜனதா கட்சி 39 இடங்களிலும்,   காங்கிரஸ்  கட்சி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி உள்பட மற்ற கட்சிகள் 11  இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் ஹூடா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரியானா மக்கள் பாரதிய ஜனதா கட்சியை  நிராகரித்து விட்டார்கள். 5 ஆண்டுகால ஆட்சியில் பெரும் இன்னலை சந்தித்த அரியானா  மக்கள் எதிர்க்கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி,  ஜனநாயக ஜனதா கட்சி, லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.