இந்திய அணியில் 4ம் இடத்திற்கு யார்? – முன்னாள் பயிற்சியாளர் சொல்வது என்ன?

மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த தவ் வாட்மோர், இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக ஷப்மன் கில் என்பவரை பரிந்துரை செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது; இந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி 2 வீரர்களின் காயங்களால் பாதிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. எனவே, 4ம் இடத்திற்கான பொருத்தமான வீரரை நீண்டகால நோக்கில் தேர்வுசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஷப்மன் கில்லுக்கு பல்வேறான பேட்டிங் திறன்கள் உள்ளன. எனவே, அவரை நான்காம் இடத்திற்கு வார்த்தெடுக்கும் வகையில், நீண்டகால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அவர் பேட்டிங்கின் பல நுட்பங்களை கற்று வைத்துள்ளார்.

போதுமான அளவில் நீண்டகால வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட் 4ம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பார். எனவே, இனி எதிர்காலத்திற்கு ஏற்பவே அனைத்தையும் திட்டமிட வேண்டும்.

தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிக அதிகம். எனவே, அவரின் இடத்தை யார் பூர்த்தி செய்வது என்பது குறித்து தெளிவான முடிவெடுத்து செயல்பட வேண்டும். அது ரிஷப் பன்ட்டாகவும் இருக்கலாம்” என்றார்.