முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்: பாஜகவை வலுப்படுத்த போவதாக பேட்டி

டெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார்.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. திடீரென தமது ஐபிஎஸ் உத்தியோகத்தில் இருந்து விருப்பு ஓய்வு கொடுத்தார். சில மாதங்கள் முன்பு விவசாயம் செய்ய போவதாக கூறி இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்தையும் அவர் சந்தித்து பேசினார். அவரது இந்த செயலால், ரஜினிகாந்த் கட்சியில் இணைவார் என்ற பேச்சுகளை உருவாக்கியது.  பாஜகவில் அவர் தம்மை இணைத்துக் கொள்ள உள்ளார் என்றும் சில வாரங்களாக பேசப்பட்டது.

டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக, டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். தமிழக மாநில தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உடன் இருந்தனர்.

பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது: பாஜகவை மேலும் வலுப்படுத்த முயற்சி செய்வேன். பதவிக்காக பாஜகவில் சேரவில்லை, சாதாரண தொண்டராகவே உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.