கொல்கத்தா:

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகிறார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி கர்ணன் தலைமறைவானார். தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதைதொடர்ந்து தமிழக போலீசார் உதவியுடன் கொல்கத்தா போலீசார் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை கோவை மலுமிச்சம்பட்டியில் ஜூன் 20ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

6 மாத கால சிறைத் தண்டனை நாளையுடன் அவருக்கு முடிவடைகிறது. இதையடுத்து கொல்கத்தா பிரசிடென்ஸி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்ணன் நாளை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.