தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் போட்டியிட அனுமதித்ததை எதிர்த்து மேல்முறையீடு: கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், ”காங்கிரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன், வரவேற்கிறேன். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதித்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது விளக்கத்தை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. இந்த விஷயத்தில் எனக்கு எப்படி போராடுவது என்று தெரியும். இது ஒரு தார்மீக மோதல். நாட்டின் முழு அதிகாரத்திற்கு எதிராகவும் நான் போர் தொடுக்க ஆயத்தமாகி உள்ளேன். எடியூரப்பா தற்போது அரசியல் கவலையில் இருக்கிறார்.

ஊழல் புகார்களில் சிக்குபவர்களை சிறைக்கு அனுப்புங்கள். ஆனால் அந்த நடவடிக்கை பாரபட்சமாக காங்கிரசாரை குறிவைத்து மட்டும் நடக்கக்கூடாது. நாட்டின் செல்வங்கள் ஒரு சிலரின் பாக்கெட்டுகளுக்கு மட்டுமே சென்று சேர்கின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்யும். இதுபற்றி இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி