முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கரூர்: முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம். கடந்த 7-ம் தேதி வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் கொரோனா குணமான நிலையில் நுரையீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

5 நாள்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வளையப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.  வளையப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.