சென்னை,

திமுக எம்.பி தம்பிதுரை,  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அரவக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி பரபரப்பு  புகார் கூறியுள்ளார்.

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கும் பணியை தம்பிதுரையும், விஜயபாஸ்கரும் தடுத்து வருவதாக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும் அவர்களை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து உள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  2014ம் ஆண்டு 110 விதியின் கீழ் கரூர் மாவட்டம் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.  அதைத்தொடர்ந்து அதற்கான  அரசாணை கடந்த 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டு, அதற்கு தேவையான  நிதி  230 கோடி ரூபாய் ஒதுக்கி, கட்டுமான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி அமைக்கும் பணியை, தற்போது அதிமுகவை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் நடத்தவிடாமல், வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள் என்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை கண்டித்து வரும் 28ம் தேதி தொகுதி மக்களுடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், டிடிவி தினகரனையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.