இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…

மதுரை: இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழந்து வருகிறார் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்.. இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இன்றும், தேய்ந்துபோன செருப்புடன் அரசு பேருந்துகளில் பயணம்  செய்து எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

இவர் பேருந்தில் ஏறும்போது, வயது முதிர்வு காரணமாக ஒரு செருப்பு தவறிவிட, அதைஎடுக்க பேருந்தில் இருந்து இறங்கி தேடிச்செல்ல, அரசு பேருந்தும் அவரை விட்டுவிட்டுச் செல்ல, அதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரது நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், அவரை தனது ஆட்டோவில் ஏற்றிச்சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியது.

ஆட்டோவில் ஏறும்போது, முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் “என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்குப்பா…’ என்று செல்ல, அவரது நிலைமையை கண்ட ஆட்டோ ஓட்டுநர் அவருடன் புகைப்படம் எடுத்து சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பாண்டியன்  என்று ஆட்டோ ஒட்டுநர், கடநதவாரம்,  மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மதுரை அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், முதியவர் ஒருவர் பேருந்தில் ஏற முற்பட்டுள்ளார்.  அப்போது, அவரது செருப்பு தவறி காலில் இருந்து கழன்றுவிழா, உடனே கீழே இறங்கி செருப்பை எடுக்க ஓடினார். அதற்குள் பேருந்தும் சென்றுவிட்டது. இதைக்கண்ட ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், அவரை அடையாளம் கண்டு, ஆகா..  இவர் முன்னாள் எம்எல்ஏ நன்மாறனாச்சே என்று பதறியதுடன், அவரை தனது ஆட்டோவில்  ஏறும்படி வேண்டினார்.

ஆனால், தயங்கிய நன்மாறன், தன்னிடம்  20 ரூபாய் தான் இருக்கிறது என்று தெரிவிக்க, அவரது நிலை கண்டு நெகிழ்ச்சிஅடைந்த பாண்டியன்,  “சரிங்கய்யா – பரவாயில்லை” என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏற்றிச்சென்று அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச்சென்று விட்டார். அப்போது, ஆட்டோவில் இருந்த அந்த முதியவ  (நன்மாறன்) உடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டார்.

அத்துடன், ஒரு தகவலையும்பதிவிட்டிருந்தார்.  அதில், “வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பைத் தேடித் திரிந்த அந்தப் பெரியவர் மதுரை கிழக்கு தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எளிமையின் சிகரமான தோழர் நன்மாறன் அய்யா. கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று  குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவரான நன்மாறன் 2முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.  முன்னாள் எம்எல்ஏவான அவர்  “மேடை கலைவாணர்” என்று புகழப்டுபவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப்பணியாற்றியவர்களில் ஒருவரான நன்மாறன் (எ) ராமலிங்கம் மதுரை அரசியல் களத்தில் மறக்க முடியாதவர். எளிமைக்கு சொந்தக்காரரான நன்மாறன்,  முதுகலை மேல்படிப்பு முடித்தவர். ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் தட்டச்சராக நன்மாறன் பணியாற்றியதுடன், கைத்தறி தொழிலாளர் சங்கத்திலும், பஞ்சாலை தொழிலாளர் சங்கத்திலும் ஊழியராக பணியாற்றி நன்மதிப்பை பெற்றவர்.

தமிழக அரசியயல் தலைவர்களில் மரியாதைக்குறியவர்களில் ஒருவராக கருதப்படும் நன்மாறன் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, அதிமுக தலைவர்  ஜெயலலிதா போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

நன்மாறன், கடந்த 2001, 2006ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது கம்யூனிஸ்டு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்ததால், நன்மாறனுக்காக  ஜெயலலிதா வாக்கு சேகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது,  மதுரை ஆரப்பாளையத்தில் மனைவியுடன் வசித்து வரும் நன்மாறனுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் இருக்கும் பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளைய மகன் ராஜசேகரன் மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிகப் பணியில் இருக்கிறார்.

எளிமையான வாழ்க்கையை நடத்தி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களில் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என். நன்மாறன். அரசியல் மேடைகள், பட்டிமன்றம், பொது நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் யார் மனதும் புண்படாதவாறு பேசுவதால் “மேடைக் கலைவாணர்’ என அழைக்கப்படுபவர். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக இடதுசாரி அமைப்புகளில் பணியாற்றி வரும் இவர், எதிர்க்கட்சியினாராலும் மதிக்கப்படும் பண்பாளர்.

இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நன்மாறனை  பத்திரிகை.காம் இணையதளமும் வாழ்த்துகிறது.

You may have missed