அமைச்சர் தங்கமணியை அவதூறாக பேசியதாக   முன்னாள் எம்.எல்.ஏ. கைது

மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியை அவதூறாக பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி. இவர்  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுக-வில் இணைந்தார். அக்கட்சியின் முக்கிய பேச்சாளராக உள்ள சரஸ்வதி, மின் துறை அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக பேசியதாகவும், சமூக வலைதளங்களில் தவறாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக பிரமுகர் ராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் நகர காவலர்கள், சரஸ்வதியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் அவரை கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான திமுக-வினர் நாமக்கல் காவல் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.