பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்…

--
சென்னை:
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகமான  திமுகவில்  இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்.
வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  காணொலி காட்சி மூலம்  இன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.

வேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே. வேதரத்தினம், பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து 4 முறை திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

கடந்த  2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால்,  சுயேட்சையாக போட்டியிட்டு  தோல்வியை தழுவினார். பின்னர் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது,  பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார்.

இந்த நிலையில், எஸ்.கே.வேதரத்தினம் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்  வெளியாகி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று மாலை 4 மணியளவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார்.