டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 31 நாள்களாக  வடமாநில விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் எம்பியான ஹரிந்தர் சிங் கல்சா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்து உள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், அவர்களின் மனைவிகள், குழந்தைகள் அனுபவிக்கும் துன்பங்களை களைய மத்திய அரசு முயற்சி எடுக்காததை கண்டித்து கட்சியிலிருந்து விலகுவதாக அவர் கூறி உள்ளார்.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக பஞ்சாபிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்சா. பின்னர் 2019ம் ஆண்டு பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.