புதுடெல்லி: பல்வேறான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து சீனா ஆய்வில் ஈடுபட்டிருக்கும் வேளையில், நாமோ கோயில்கள் மற்றும் மசூதிகள் குறித்து விவாதித்துக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குகிறோம் என்று பேசியுள்ளார் முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி அருண் பிரகாஷ்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, “செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வு சீனாவில் வேகமெடுத்துள்ளது. ஆனால், நாமோ கோயில்கள் மற்றும் மசூதிகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாடு விடுதலை அடைந்ததிலிருந்து மொழி, மதம் மற்றும் ஜாதி போன்றவை பிரச்சினைகளாகவே இருந்து வருகின்றன. அவற்றிலேயே நாம் நேரத்தை வீணாக்கி வருகிறோம். எனவே, இவற்றிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

சீனாவின் நிலையே வேறாக இருக்கிறது. எனவே, நாம் இன்னும் மாறவில்லை என்றால், நிச்சயமாக நமது காலத்தை நாம் வீணாக்கியவர்களாகவே இருப்போம். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்த முடிவு சிறப்பான முடிவுதான். அதன்மூலம் அப்பிராந்தியத்தில் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் மேம்படும்” என்றார்.