இஸ்லமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆஸிப் ஜர்தாரி போலி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.


பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் பணத்தை சேர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு செய்ததாக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜர்தாரி மற்றும் அவருடைய சகோதரி யர்பால் தால்பூருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை பாகிஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு தீவிரப்படுத்தியது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜர்தாரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சர்தாரியை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். எனினும், கைது குறித்த விரிவான தகவலை ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவிக்கவில்லை.

அவரது சகோதரியும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் ஜர்தாரி தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஜர்தாரி, ஊழல் மற்றும் கொலை வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு முன்பு 11 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அதன்பிறகுதான் அவர் பாகிஸ்தான் அதிபர் ஆனார்.

எனினும் அவர் எந்த வழக்கிலும் இதுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.