Random image

வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்ற பிரதமர் மோடி

டில்லி:

வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பாஜக முன்னணியினர் நடந்து சென்றனர்.

உடல் நலமின்றி  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி  நேற்று காலமானார். இன்று அவரின் இறுதிச் சடங்கு டில்லியில் நடைபெற்று வருகிறது.

வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட உள்ள இடம்

சிறுநீரக தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து  நேற்று மாலை 5:05 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டில்லியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு வாஜ்பாயிக்கு ஸ்மிரிதி ஸ்தால் நினைவிடத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஉள்பட ஏராளமானோர் வாஜ்பாயின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில், வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  எடுத்து வரப்பட்டு பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.  ஏராளமான பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 2 மணி அளவில், வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலத்துக் காக தயார் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது.

சரியாக பிற்பகல் 2.15 மணிக்கு  பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து, வாஜ்பாயின் உடல் ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆரிக்கணக்கானோர் கலந்துகொண்டு நடந்து சென்றனர்.

வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட இருக்கும் ராஷ்ட்ரிய ஸ்மிரிதி சித்தல், என்ற இடத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த  பல வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட நாடு முழுவதும் இருந்து ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும்  குவிந்துள்ளனர்.