கொல்கத்தா: இந்தியாவின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் சுனி கோஸ்வாமி மாரடைப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.
இவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக, கடந்த 1956 – 64க்கு இடைபட்ட ஆண்டுகளில் சுமார் 50 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளவர்.
கடந்த 1960ம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்தியக் கால்பந்து அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். கடந்த 1962ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு கால்பந்தில், இவரின் தலைமையில் விளையாடிய இந்திய அணி தங்கம் வென்றது.
அதே ஆண்டில், இவர் ‘சிறந்த ஆசிய ஸ்டிரைக்கர்’ விருதை வென்றார். இவர் அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். இவரது உருவப்படம் பதித்த தபால் தலையும்கூட வெளியிடப்பட்டுள்ளது.
இவர் சர்வதேச போட்டிகள் தவிர்த்து, பல உள்ளூர் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளிலும் ஆடியுள்ளார். இவர் சமீபகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.