சென்னை:

மிழக சட்டமன்றத்தின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று, மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்பட மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்க இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2020ம் ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. இன்று 2வது நாள் கூட்டம் கூட்டத்தில் முதலில்,  மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நல்லப்பன், வடிவேலு, ஜெனிபர் சந்திரன், எஸ்.ஏ.எம்.உசைன், சு.சுப்பிரமணியன், கே.வி.முரளி தரன், அழகராஜன், நாராயணன், கே.கே.சின்னப் பன், வ.மு.சுப்பிரமணியன், வை.பாலசுந்தரம், டாக்டர் தேவராஜன், சக்திவேல் முருகன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். அதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  சிறிது நேரம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைதொடர்ந்து, முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு குறித்து தனி  இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அதை சபாநாயகர் தனபால் வாசித்தார்.

அப்போது,  பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் 1977-80, 80-84, 85-88, 89-91 ஆகிய வருடங்களில் 4 முறை சேரன்மாதேவி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 1980-84 வரை சட்டமன்ற துணை தலைவராகவும், 85-88 வரை சட்டமன்ற சபாநாயகராகவும், 99-2004 வரை நெல்லை தொகுதி எம்.பி.யாகவும் அ.தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவராகவும் திறம்பட பணியாற்றினார்.

அவர் கடந்த 4.1.2020 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். பி.எச்.பாண்டியன் இனிய பண்பாளர். கட்சி தலைவர்கள் அனைவரின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர். தனது அனுபவத்தால் சட்டமன்றத்தை பாரபட்சமின்றி நடத்தினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர் கள் அனைவரும் சில மணித்துளிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் சபை நிகழ்ச்சிகள் 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டு,  பின்னர் 10.25 மணிக்கு சபை மீண்டும் கூடியது.