மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததையடுத்து, இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரஹானேவுக்கு பல முன்னாள் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுள், வீரேந்திர சேவாக், ரிக்கிப் பாண்டிங், ஷேன் வார்னே, விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோர் அடக்கம்.

பந்து வீச்சாளர்களை சரியான நேரத்தில் மாற்றியது, பீல்டிங் அமைப்பை கச்சிதமாக மேற்கொண்டு, நேரத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்தது உள்ளிட்ட அம்சங்களைக் குறிப்பிட்டு அவரைப் புகழ்ந்துள்ளனர் அந்த முன்னாள் நட்சத்திரங்கள்.

அடிலெய்டு டெஸ்ட்டில் கிடைத்த மோசமான தோல்வியை அடுத்து, இந்திய அணி விரைவில் மீண்டு வருமா? என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியிருந்தனர். ஆனால், அந்த சுவடே தெரியாமல், விரைந்து மீண்ட இந்திய அணி, டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவை எதிர்பாராத விதமாக மடக்கி சுருட்டியது. அந்த அணியில் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு முக்கிய பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆனார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதேசமயம், இரண்டாம் நாளான நாளை, இந்திய அணி, முழுநாளும் களத்தில் நின்று பேட்டிங் செய்யுமா? அல்லது அடிலெய்டு இரண்டாவது இன்னிங்ஸ் போல் ஆகிவிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.