தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!

ஐதராபாத்:

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலத்தலைவர் டாக்டர்  தமிழிசை சவுந்தரராஜன்,  தெலங்கானா மாநில  ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஐதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழ்நாடு பாஜகவின மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். இவரை குடியரசுத் தலைவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 1) உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனது கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை. அவருக்கு தமிழக அரசியல் கட்சியினர் வாழ்த்துதெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், இன்று தெலுங்கானா மாநிலஆளுநராக பதவி ஏற்றார். அவருக்கு  தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சிங் சவுகான்,பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த சீர்மிகு நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், தெலங்கானா அமைச்சர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்தவர் நரசிம்மன். இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். அவரது ஓய்வுக்குப் பிறகு, டாக்டர் தமிழசை தமிழகத்தின் 2வது ஆளுநராகவும், முதல் பெண் ஆளுநராகவும் பதவி ஏற்றுள்ளார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,  ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத்திற்கு அடிக்கடி வந்துள்ளேன். இதனால் தெலுங்கானா மாநில கலாச்சாரத்தை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அதிக முறை இங்குள்ள மக்களை நேரில் பார்த்ததால் அவர்களையும் புரிந்து வைத்திருக்கிறேன்.

தெலுங்கானா மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது எனக்கு தெரியும். அதற்கேற்ப நான் செயல்படுவேன். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் பேதம் பார்க்காமல் செயல்படுவேன். இங்குள்ள கலாச்சாரம் பொதுமக்களை புரிந்து வைத்திருப்பதால் இங்கு பணியாற்றுவதில் எந்தவித சிரமமும் எனக்கு ஏற்படாது என்று கூறினார்.