ஜெ. இறந்ததே சசிகலாவால்தான்: அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

நாமக்கல்:

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவுக்கு காரணம் சசிகலாதான் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதிமுக 47வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நாமக்கல் அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாதான் காரணம் என்றும், ஜெயலலிதாவை  மேல்சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பாததால்தான் அவர் மரணமடைந்தார் என்றும் கூறி உள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்தார். சுமார் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்ட வேளையில், திடீரென அவர் இறந்தார்.

இது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. இந்த நிலையில் ஜெ. மறைந்து 2 ஆண்டுகளை நெருக்கும் வேளையில், தற்போது, ஜெ. மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என்று அதிமுக அமைச்சர்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டடம், பரமத்தி வேலூரை அடுதத, ஜேடர்பாளையத்தில் அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்ட விழாவில், பேசிய அமைச்சர் தங்கமணி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்றார்.  டிடிவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் தான்  10 ஆண்டுகளாக அவரை கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார்  என்று கூறினார்.

மேலும், அப்போலோ  மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களில் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பார்த்தால் தொற்றுநோய் வந்துவிடும்… வேண்டாம் என்றார்கள்… எனவே நாங்கள் ஒதுங்கிக் கொண்டோம்…  அம்மா  நன்றாக இருந்தாலே போதும் என்றே நினைத்தோம் என்றார்.

சட்டமன்றத்தில் டிடிவி தினகரனிடம், அம்மா அவர்கள் எதற்காக உங்களை விலக்கி வைத்தார்கள் என்றதற்கு, அதைப்பற்றி பேசாமல், சின்னம்மா என்னை துணை பொது செயலாளராக நியமித்தார்கள். அதனை நீங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர்கள் என்றார். எங்களை எல்லாம் கேட்ட பிறகா உங்களை துணை பொது செயலாளராக அறிவித்தார்கள்? டிடிவியிடம் நான் கேள்வி கேட்ட பிறகு, அவர் சட்டமன்றத்துக்கே வருவதில்லை.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.