டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லி ராஜ்காட்டில் தமது ஆதரவாளர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் 4ம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கி உள்ளது.  ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொழில்களுக்கு விலக்குகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வேலையிழந்ததால் வருமானம் இன்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு இன்னும் பயணித்து வருகின்றனர்.
போதிய பேருந்துகள் மற்றும் ரயில் போக்குவரத்து இல்லாமல் பல ஆயிரக்கணக்கானோர் கால்நடையாகவே சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். அவர்களில் பலர் விபத்துகளில் சிக்கி உயிரையும் இழக்கின்றனர். இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு செயல்பாடுகள் மோசம் என்று கண்டனங்கள் எழுந்தன.
இந் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதததை கண்டித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா திடீர் போராட்டத்தில் குதித்துள்ளார். டெல்லி ராஜ்காட்டில அவர் தமது ஆதராவளர்களுடன் போராட்டத்தில் இறங்கினார்.
http://https://twitter.com/scribe_prashant/status/1262263051459325952
மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர், மத்திய அரசு புத்திசாலித்தனமாக இருந்தால், ரூ .40 லட்சம் கோடி நிதி தொகுப்பை எளிதில் அறிவித்திருக்க முடியும், இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆகும். உலகின் மிக உயர்ந்த தொகுப்பாகவும் இருந்திருக்கும் என்று விமர்சித்துள்ளார்.
எல்லா சீரியல்களையும் போலவே நிர்மலா சீரியலும் இறுதியாக முடிந்து விட்டது. இதுவரை எந்த ஒரு மத்திய அரசும் செய்யாததை இந்த அரசு செய்திருக்கிறது. அதாவது ஏழைகளின் காயத்தில் உப்பை வைத்து தேய்த்திருக்கிறது என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.