முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் மறைவு! – ஒரு சோஷலிச தலைவரின் இழப்பு!

பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்களில் ஒருவருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங்கின் மறைவு, ஒரு உண்மையான சோஷலிச தலைவரின் மறைவாக வர்ணிக்கப்படுகிறது.

74 வயதாகும் ரகுவன்ஸ் பிரசாத், செப்டம்பர் 13ம் தேதி மறைந்தார். அவர் கடந்த 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றினார்.

தனது கட்சியின் தலைவராக இருந்த செல்வாக்கு மிக்க லாலு பிரசாத் யாதவை, இவர் கேள்விகள் கேட்க அஞ்சாதவர். பல பிராந்தியக் கட்சிகளில் இந்த நிலை இல்லை. மேலும், இவர் எளிதில் யாரும் அணுகக்கூடியவராக இருந்தார்.

இவருக்கு, கட்சி பேதமின்றி, நண்பர்கள் உண்டு. “ரகுவன்ஸ் பிரசாத்தின் மறைவு, பீகார் அரசியலுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டிற்கே வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடியே இரங்கல் தெரிவித்துள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.

இவரின் மறைவுக்கு, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.