ந்தூர்

முன்னாள் வனத்துறை அமைச்சர் அனில் மகாதேவ் தவேவின் மரணத்துக்கு அவர் நண்பர் நீதி விசாரணை வேண்டி மனு செய்துள்ளார்.

நரேந்திர மோடியின் மத்திய அரசின் அமைச்சராக பணி புரிந்த அனில் மகாதேவ் தவே வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையை கவனித்து வந்தார்.   இவர் கடந்த மே மாதம் 18ஆம் தேதி மரணம் அடைந்தார்.  இவரது மரணம் சந்தேகத்துக்குரியது எனவும் அதற்கு நீதி விசாரணை தேவை எனவும் அவருடைய நண்பர் மனு அளித்துள்ளார்.  இந்த மனு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தவே இறப்பதற்கு முதல் நாள் பிரதமருடன் சந்திப்பு, அலுவலகப் பணிகள் என பிசியாக இருந்துள்ளார்.  அவர் இறந்த அன்று அவருடைய பணியாளர் அவரை காலை 7.30 மணிக்கு எழுப்ப முயன்றுள்ளார்.  அவர் எழாததால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.   காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை அவருக்கு ஏன் எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை?  அவருடைய வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மனோகர் லோகியா மருத்துவ மனை இருந்தும் ஏன் மருத்துவ உதவி கோரப்படவில்லை?

அவருக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு வேண்டுகோள் வந்துள்ளது.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை இந்தியாவில் அனுமதிக்க வேண்டி அந்த  வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.    ஆனால் அதற்கு அவர் அனுமதி அளிக்கவில்லை.   அவருடைய மரணத்துக்கும் இந்த வேண்டுகோளுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கக் கூடும்.

அவருடைய உடலில் சில நீல நிறப் புள்ளிகள் காணப்பட்டன.   அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.  சட்டப்படி சந்தேகத்துக்குரிய மரணம் என்றால் பிரேத பரிசோதனை செய்து அது இயற்கையான மரணம் என்பது உறுதி செய்யப்படவேண்டும்.  ஆனால் அரசோ அவர் குடும்பத்தினரோ அதை செய்யவில்லை.  அத்துடன் இதில் போலீசார் தலையிட்டு நீதிபதியை அழைத்து அவர் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும்.  அதுவும் நடை பெறவில்லை.

அவசர அவசரமாக அவர் உடல் எரிக்கப்பட்டதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை.  அவர் உயிலில் இருப்பது அவருடைய கையெழுத்துதான் என்பதும் உறுதி செய்யப்படவில்லை.   எனவே அவருடைய மரணத்தை சந்தேகத்துக்குரியது என குறிப்பிட்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.   நான் இத்தனை நாட்கள் அவருடைய குடும்பத்தினர் இதை கேட்பார்கள் என காத்திருந்தேன்.   ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யதாதால் இந்த மனுவை அளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த அமைச்சர் தவே மற்றும் பட்டாசாரியா மாணவ பருவத்தில் இருந்தே நண்பர்கள் ஆவார்கள்.  இருவரும் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டி இட்டவர்கள்.   பட்டாசாரியா தனது மனுவுடன் தவே இறந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாக இணைத்துள்ளார்.