இஸ்லாமியர்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்…..பிரவீன் தொகாடியா

ஜெய்ப்பூர்:

‘‘இஸ்லாமிய சமுதாயத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்து இரு குழந்தை கொள்கையை அமல்படுத்த வேண்டும்’’ என்று விஹெச்.பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷ்த் அமைப்பின் தலைவராக இருந்து, சமீபத்தில் அந்தராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ள பிரவீன் தொகாடியா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘ இஸ்லாமிய சமுதாயத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மை அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும். 2 குழந்தைகள் கொள்கையை அமல்படுத்தி இஸ்லாமியரின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் அவர்களுக்கு மட்டுமே செலவிடக் கூடாது. அந்த பணம் அனைத்து ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

எங்களது புதிய அமைப்பு சார்பில் 20 கோடி இந்துக்களை கொண்டு வாக்கு வங்கி உருவாக்கப்படும். நாட்டின் அரசியலில் இந்துக்கள் ஜனநாயக அடிப்படையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்துத்வா திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். அதற்குறிய பாதையில் பயணம் செய்து தரமான கல்வி, வேலைவாய்ப்பு, தொழிலாளர் பாதுகாப்பு, பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பணவீக்கம், விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு போன்று முக்கியமான அம்சங்களில் மோடி அரசு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 32 ஆயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்தி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எல்லையில் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.