திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியுடன் விவசாயிகள் போராட்டம்!

திருச்சி.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியை  வாயில் கவ்விக்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தண்ணீரில் தமிழகம் வறட்சியால் பாதிப்படைந்து வருகிறது. பயிர்கள் கருகுவதால் விவசாயிக்ள மரணத்தை தழுவி வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சேதமான பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். எங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இதுவரை எந்தவித நடடிவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இன்று காலையில், மாவட்ட கலெக்டர் தலைமையில்  வழக்கமாக நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை குறித்து பேசினர்.

தொடர்ந்து  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விசசாய சங்க நிர்வாகிகள்  கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ள அரசை கண்டித்து,  கலெக்டரை சுற்றி அங்கபிரதட்ச ணம் செய்யப்போவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மறுத்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த இறந்த எலிகளை வாயில் வைத்தும், எலிக்கறியை மென்றும் சிம்பாலிக்காக  போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

மேலும் கலெக்டரிடம் கொடுப்பதற்காக மனு ஒன்றும் வைத்திருந்தனர். அதில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் வழங்க வேண்டும், மழைநீரை ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமை செயலகம் முன்பு எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும்,  த.மா.கா.மாநில விவசாயி அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் விவசாயிகள் பலர்  கலெக்டரிடமம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம், வாழைக்கு ரூ.1லட்சம், வெற்றிலை, கரும்புக்கு ரூ.50ஆயிரம் வழங்க வேண்டும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக திருச்சி கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.