சென்னை:

பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கிளைகள்  செயல்படுகின்றன. இந்த  மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை செலவாக  18 லட்ச ரூபாய் பணம் வசூல் செய்த மருத்துவமனை, உரிய சிகிச்சை அளிக்காததால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது என்று ரோஷெனா ஸெஹ்ரா  என்பவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர், “’என்னுடன் படித்த நண்பருடைய 7 வயது மகள் டெங்குக் காய்ச்சல் காரணமாக ஃபோர்டிஸ்(Fortis) மருத்துவமனையில் 15 நாள்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அதற்கு, 2,700 கையுறைகள் உள்பட 18 லட்ச ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.  இறுதியில் அந்தக் குழந்தை இறந்துவிட்டதுட  என்று பதிவிட்டுள்ளார்.

அவருடைய இந்த ட்விட்டை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரீ-ட்விட் செய்திருக்கிறார்கள்.  மேலும், இதுகுறித்து அவரிடம் விவரமும் கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ரோஷெனா ஸெஹ்ரா தெரிவித்துள்ள கூடுதல் விவரத்தில், “அந்த மருத்துவமனையில் 660 ஊசிக்கு பணம் வாங்கி இருக்கின்றனர். அதன்படி பார்த்தால், ஏழு வயது குழந்தைக்கு ஒரு நாளுக்கு சராசரியாக 40 ஊசி செலுத்தியதாக கணக்கு ஆகிறது.  குழந்தைக்கு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் எடுக்கச் சொல்லி மருத்துவர்களிடம் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். வெண்டிலேட்டரில் குழந்தை சிகிச்சை பெறும்போதும் வலியுறுத்தினர். (வெண்டிலேட்டரில் சிகிச்சைப் பெறும்போது சி.டி ஸ்கேன் எடுக்கமுடியும்).

ஆனால், மருத்துவர்கள் ஸ்கேன் எடுப்பதற்கு தொடர்ந்து மறுத்தே வந்திருக்கிறார்கள். கடைசியாக  ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 13 ரூபாய் மதிப்புள்ள சுகர் ஸ்டிர்பஸ்க்கு (Sugar strips) 200 ரூபாய் பணம் பெற்றிருக்கிறார்கள்”  என்று பதிவிட்டுள்ளார்.

ரோஷெனா ஸெஹ்ராவின் இந்தப் பதிவுகள் ட்விட்டரில் வைரலாகிவருகின்றன.  மேலும், மருத்துவமனையில் வழங்கிய பில் ஆதாரத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அவருடைய ட்விட்டுக்குப் பதிலளித்துள்ள ஃபோர்டிஸ் நிறுவனம், பாதிக்கப்பட்டவரின் விவரங்களை அளித்தால் இதுகுறித்து விசாரணை நடத்துவோம் என்று பதில் அளித்துள்ளது. ஆனாலும் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக இதுவரையில் ஃபோர்டிஸ் நிறுவனம் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்காமல் மவுனமாக இருந்து வருகிறது.