‘அடிக்கல் பிரதமர்’ மோடி, காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார்! நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விலாசல்

நாகர்கோவில்:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின்  மோடி இரும்பு மனிதர் அல்ல அடிக்கல் பிரதமர் என்று விமர்சித்தவர், காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி என்று சாடினார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில், திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை  காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் மோடி குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினார்.  வாக்கு கேட்பதற்கு கூட பாஜகவில் தலைவர் இல்லாமல் மற்ற தலைவர்களை கூறி வாக்கு கேட்கும் மோடியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று கூறினார்.

நாகர்கோவில்  திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதவாது,

“இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். இதன் காரணமாக தான் பிறர் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று கூறினேன் என்று பேச்சை தொடங்கிவர்,  பிரதமர் நரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு  பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் ‘அடிக்கல்’ பிரதமர் என்று கடுமையாக சாடினார்.

பிரதமர் மோடி அவர்கள் புதுப்புது உடைகள் உடுத்திக்கொண்டு, நாடு நாடாக சென்று கொண்டி ருக்கிறார். அவர்  ஒளிமயமாகி வருகிறார்…ஆனால்,  நாடு இருளில் தான் உள்ளது என்றவர்,  கருப்பு பணத்தை ஒழிப்பது தான் தன் முதல் வேலை என்று சொன்ன மோடி, 15 லட்சம் வங்கிக்கணக்கு களில் போடப்படும் என்றும் சொல்லி வெற்றி பெற்றவர்,  ஒரு 15000 அல்லது 15 ரூபாயாவது போட்டாரா..? என்று கேள்வி எழுப்பினார்.

ஊழல் இல்லாத ஆட்சி தருவேன் என்று கூறி ஆட்சியை பிடித்த, மோடி ஆட்சியில் தான் ரஃபேல் ஊழல் நடந்துள்ளது.  இதுதொடர்பாக இந்து பத்திரிகையில் ஆதாரம் வெளியிடப்பட்டது… ஆதாரத்தை வெளியிட்ட இந்து ராமுவை மிரட்டுகிறார்கள்… ஆனால் இந்து ராம் பயப்படவில்லை. அதற்காக அவருக்கு திமுக பாராட்டு தெரிவிக்கிறது என்றவர், கடந்த தேர்தலின்போது, இந்து,  ராம் என்று கூறி வாக்குகளை கேட்ட பாஜகவுக்க இப்போது இந்து ராம் என்ற பெயரை கேட்டாலே பயம்….

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்,  வடக்கே படேல் பெயரை வைத்து ஓட்டு வாங்க நினைக்கிறார்கள், அதுபோல, தெற்கே காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். ஓட்டு கேட்பதற்கு கூட பாஜகவில் தலைவர் இல்லாத நிலை  மோடியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

மோடிக்கு திடீரென பெருந்தலைவர் காமராஜர் நினைவு வந்திருக்கிறது. காமராஜர் வீட்டுக்குள் நுழைந்து தீ வைத்தவர்கள், இன்று அவரை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது..? பத்திரிகை களில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன. ஏன் உங்களுக்காக ஓட்டுக் கேட்க உங்கள் கட்சி தலைவர்கள் படம் கிடைக்கவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  தமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை மத்திய அரசு நடத்தி வரு கிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது வெறும் லஞ்சம், ஊழல் ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சி , கொலைகார ஆட்சி மட்டுமல்ல, பெண் களுக்கு எதிராக அநியாய ஆட்சியாக மாறிவிட்டது என்று கடுமையாக சாடிய ஸ்டாலின்,  தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி ‘பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.