ஊழலின் ஊற்றுக்கண்களும் விசித்திரமான கண்டக்டர் ரஜினியும்…

ஊழலின் ஊற்றுக்கண்களும் விசித்திரமான கண்டக்டர் ரஜினியும்…

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்…

வரது ரசிகர்களைத் தவிர பெரும்பாலானோர் எதிர்பார்த்த மாதிரியே தன்னால் இப்போதைக்குஅரசியலுக்கு வரமுடியாது என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் விக்ஸ் என்பதையே சுற்றி சுற்றி எழுதி விட்டு வாய்தாவோடு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.

அரசியல் மாற்றம், இளைஞர்களிடம் எழுச்சி போன்ற வார்த்தைகளையெல்லாம் மானே தேனே என தூவித்தூவி எழுதப்பட்ட ஒரு அறிக்கையை, நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு வந்து லீலா பேலஸில் செய்தியாளர்கள் சந்திப்பு என்ற பொருளில் அவர் மட்டுமே பேசி சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது புதிய கருத்துக்கள் அல்ல.. காலங்காலமாய் பல்வேறு தரப்பினர் கூட்ட அரங்குளில் பேசியும் எழுத்துக்களில் வடித்தும் வந்த விஷயங்கள்தான் அவை..

மறைந்த திரைப்பட இயக்குநர் திருப்பதிசாமி, பாட்சா படப்பிடிப்பின்போது, இணை இயக்குநராக ஒரு வேலையாளிடம் எரிச்சலுடன் சொன்ன, ‘’நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி, திருப்பி திருப்பி வந்து டவுட் கேக்காதே’’ என்பதையே ரஜினி படத்தில் பன்ச் டயலாக்காக சொன்னபோது ஆயிரம் மடங்கு வலிமை பெற்றுபோனது..

அதுபோலத்தான் இப்போது பேசியிருக்கும் ஊழல் ஒழிப்பு, நேர்மையான ஆட்சி, இளைஞர்களின் பங்களிப்பு போன்ற சமாச்சாரங்கள் ரஜினியின் வாயால் வருவதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. அதற்கு, லட்சோப லட்சம் ரகிகர்களை ஆதரவை பெற்றிருக்கும் ரஜினி என்பவர் தகுதியானவரும் கூட மறுப்பதற்கேயில்லை.

அவர் விஷயத்தில் மேற்கொண்டு போவதற்குமுன், ஊழலின் ஊற்றுக்கண் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை பார்ப்போம்.
ஆம் சாட்சாத் நம் மக்களிடமிருந்தேதான், அதுவும் சாமான்ய மக்களிடம் இருந்தேதான் ஆரம்பிக்கும். அரசியலும் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய நிர்வாகத்தையும், அவர்கள்தான் மொத்தமாகக் கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது அக்மார்க் உண்மை.
ஓட்டுக்கு காசு வாங்கி விலை போகும் ஒரு சாமானிய வாக்காளனின் பேராசையில் இருந்து துவங்குகிறது அந்த கேவலமான பயணம்..
அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும், கவுன்சிலர், சேர்மன், எம்எல்ஏ எம்பி போன்ற பதவிகளில் இருப்பவர்களையும் எடுத்துக்கொண்டு அவர்கள் நிலையை யோசித்துபாருங்கள்.

தனது வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதி அரசியல் தலைவர் வந்து செல்வதைக் கௌரவமாக பார்ப்பான் ஒருவன். அப்படி வருகிற தலைவர் சும்மா வந்துவிட்டு செல்லமுடியுமா? அன்பளிப்பு செய்கிறார் என்றால் 50 ரூபாய் கொடுத்தால் சாமான்யன் புன்னகைப்பானா? இவ்ளோ பெரிய ஆள், இவ்ளோ பெரிய அல்ப்பையா இருக்கானே? பிச்சைக்கார பய.. என்று பட்டம் கட்டிவிட மாட்டானா?

அதனால் என்ன செய்வார், அந்த அரசியல் பிரபலம்? அன்பளிப்பை குறைந்தபட்ச வெயிட்டிலாவது அவர் செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அவரின் பிம்பத்தை சல்லிசல்லியாய் நொறுக்கிவிடுவார்கள் ஏரியாவில்.

ஒரு கட்சியின் அசைக்கவே முடியாத செல்வாக்கு பெற்ற நகரச்செயலாளர் விவாரத்தை உதாரணமாக பார்ப்போம்.
தடமுகூர்த்த நாளில் குறைந்த பட்சம் 50 கல்யாண பத்திரிகைகளாவது வந்துகுவியும். அனைத்திற்கும் அவர் போகவேண்டும். போகமுடியாத கல்யாணங்களுக்கு அன்பளிப்பு கவராவது போய் சேர்ந்தாகவேண்டும்.

தட முகூர்த்த நாள் என்றால் அண்ணன் பாக்கெட்டில் இருந்து 25 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்வரையாவது காலியாகியே தீரும். ஒரு வருடத்தில் 50 கல்யாண நாட்கள் இருக்கின்றன. எத்தனை லட்சங்கள் செலவா என்று நீங்களே பெருக்கி பார்த்துக்கொள்ளுங்கள்..அப்புறம் இங்கே சொல்வது பற்றி சந்தேகம் இருந்தால் உங்கள் ஊரில் செல்வாக்கு பெற்ற நகரசெயலாளர் உள்வட்டாரத்தை கேட்டுப்பாருங்கள்.

இதற்கப்புறம், துக்க நிகழ்ச்சிகள், துயர சம்பவங்கள் போன்றவை பக்கமும் நகர செயலாளர் தலைகாட்டி அங்கும் சொந்த காசில் நிவாரணம் தந்தாகவேண்டும். அதற்கப்புறம் இன்னும் விதவிதமான பல உதவிகள் செய்யவேண்டும். கூடவே சுற்றிவரும் தொண்டரடி பொடியாழ்வார்களுக்கு தினமும் ஏதாவது செய்யவேண்டும். ஊரை சுற்றிவரும் வாகனத்திற்கு டியூ கட்டவேண்டும், பெட்ரோல் டீசல் போடவேண்டும்..

அவ்வளவு ஏன் தினம் பளிச்சென வெள்ளை வேட்டி சட்டையில் வருவரோ ஞாபகம் இருக்கா? ஒரு செட் வேட்டி சட்டையை வெளுத்து அயர்ன் செய்து தர 75 ரூபாய்கூலி. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று செட் மாற்றுகிறவர்களும் உண்டு., இந்த ஒரே விஷயத்தில் மட்டும் வருடத்திற்கு செலவு எங்கே போய் நிற்கும் பாருங்கள்..

உள்ளூர் மக்களின் நிர்ப்பந்தத்தால் இப்படி பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்படும் அந்த அரசியல் தலைக்கு இன்னொரு பக்கம் வேறு விதமான குத்துகள் விழுந்துகொண்டே இருக்கும்..

எந்த கட்சியின் தலைவன், வெளியூர்போனால் மொத்த செலவையும் தன் பணத்தில் பார்த்துக்கொள்கிறான்? ஆகையால், கட்சித் தலைமையோ அல்லது மாநில அளவிலான பொறுப்பாளர்களோ ஊர் பக்கம் வந்தால் தோரணம் கட்டி, போஸ்டர்கள் ஒட்டி மாலை மரியாதையோடு அவர்களை வரவேற்று சகல விதத்திலும் உபசரித்து வழியனுப்பிவைப்பதுவரை அத்தனை செலவுகளையும் நமது நகர தலைதான் செய்தாகவேண்டும். வேண்டுமானால் சிலவற்றை மட்டும் மற்றவர்கள் தலையில் கட்டலாம்.

இதற்கப்புறம் அடுத்தகட்ட தொல்லைகள். கட்சிக்கு பொதுமக்கள் வாயை பிளக்கிற மாதிரி பிரமாண்டமாய் பொதுக்கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும்.. தலைமை அறிவிக்கும் மாநாட்டுக்கு ஆள் சேர்க்க வேண்டும் மாநாட்டுக்கு நிதி கொடுக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகரை அவனது கட்சி புரட்டி எடுத்துக்கொண்டே இருக்கும்.

என்ன எழவும் இதெல்லாம்.. வேண்டாம் என்று ஒரு பணச்செலவற்ற துறவியாக அரசியலில் உலாவரமுடியுமா?. அப்படி ஒருத்தன் வந்தால் அவனைத்தான் மக்கள் செல்வாக்கான தலைவன் என நினைப்பார்களா? கட்சிதான் அவனை அரவணைக்குமா?
நல்லவனாக இருந்தால், அங்கே களத்தில் இருக்க விருப்பப்படபோவதில்லை. அதனால் சம்பாதித்து சமாளித்துக்கொள்ளலாம் என்று வல்லவனாகிவிடுகிறான். அப்படி களம் புகும் அரசியல்வாதியால் எல்லாமே சாத்தியமாகிறது.

அரசியலில் நேர்மையும் கை சுத்தமும் இல்லாத கட்சி தலைமைகள், தங்களுக்கு அட்சயபாத்திரமாய் அள்ளிக்கொடுக்க, அடுத்த தலைகளை ஊழல்வாதிகளாக மாற்றியே தீருகிறது. மக்களும், பணம் கொடுப்பவன் மட்டுமே நல்ல அரசியல்வாதி என்றும் அவனை மட்டுமே கொண்டாடமுடியும் என்பதில் திடமாய் இருக்கிறார்கள். அரசியல் வாழ்வில் கை சுத்தமாக இருப்பவனை பிழைக்கத்தெரியாதவன் என நக்கலடித்து விரட்டுகிறார்கள்.

சொத்து சேர்க்கவும், மற்றவர்களூக்கு அன்பளிப்பு என்ற பெயரில் பிச்சை போடவும் களமிறங்கும் அரசியல்வாதி, முதற்கட்டமாய் அரசாங்க நிர்வாகத்தில் நுழைகிறான். வேலைவாய்ப்பு, இடமாற்றம்,, விதிமீறல் காரியங்களை முடித்துக்கொடுப்பது, காண்ட்ராக்ட் என ஒன்றுவிடாமல் அத்தனை விஷயங்களிலும் பணத்தை அள்ளிக்குவிக்கிறான்…

விளைவு, லஞ்சமும் ஊழலும் என்கிற இரண்டு விஷயங்கள் அவனால் எங்கெங்கோ பாய்ச்சப்படுகிறது. கட்சி மேலிடம், சக கட்சியினர், அரசு அதிகாரிகள் என அந்த லஞ்சப்பயணம் நீண்டு. கடைசியில் பொதுமக்களையும் போய் சேர்க்கிறது. ஏதோ ஒரு வகையில் லஞ்சப் பணம் போய் சேராத பொதுமக்களே இல்லை என்றும் அடித்துச்சொல்லலாம்..

ஓட்டுக்கு பணம் வாங்குதல், பல்வேறு தருணங்களில் அரசியல்வாதியிடமிருந்து பண ஆதாயத்தை எதிர்பார்த்தல், தெருக்கோவிலில் கூழ் ஊற்ற பெரும் தொகையை நன்கொடையாக கேட்பதுகூட இதில் வராமல் போகாது.
இந்த இடத்தில் இன்னொன்றை மறக்காமல் சொல்லியே ஆகவேண்டும்.

வீடு தேடிவந்தோ, அல்லது வீடு தேடிப்போனாலோ, கேட்பதை அள்ளிக்கொடுத்தால் எவனும் வள்ளல் ஆகிவிடுவான். அள்ளி இறைப்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறானா, கட்டப்பஞ்சாயத்து செய்கிறானா இல்லை பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துகிறானா என்பது பற்றியெல்லாம் மக்களுக்கு கவலையே கிடையாது..

என்ன கண்றாவியையாவது செய்துவிட்டு, ஒரு கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி விட்டாலோ, ஒரு பள்ளிக்கூடத்திற்கு நன்கொடை வழங்கி விட்டாலே போதும். அவன் வாழும் வள்ளல் ஆகிவிடுவான். அவனே அவன் சார்ந்த சாதி இனத்திற்கு செய்துவிட்டால் அவன் சமூகத்திற்கே காவலன் ஆகிவிடுவான். .சமூக விரோதிகள் வளர்ந்து இப்படித் தான் பெரும் செல்வாக்கோடு காலங்காலமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

மறுபடியும் அரசியல்வாதி சமாச்சாரத்திற்கு வருவோம்.ஒரு கட்சியின் நகர செயலாளரே இவ்வளவையும் சமாளிக்க, அரசாங்க நிர்வாகத்தில் புகுந்து கொள்ளைடியக்க வேண்டும் என்றால், மாவட்ட செயலாளர்கள், மாநில பொருப்பாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள், அந்த இடங்களை தக்கவைத்துக்கொள்ள போராடுபவர்கள். மேற்படி பதவிகளை பிடிக்க காத்திருப்பவர்கள் என, எத்தனை தரப்பு எவ்வளவு செலவு செய்யவேண்டியதிருக்கும்?

அரசு ஊழியர்கள் மட்டத்திலும் இப்படித்தான். மேலதிகாரிகள் தங்களை சகல விதத்திலும் குளிப்பாட்டச்சொல்லி கீழ்மட்டத்தை நெருக்கி கொழிப்பார்கள். கீழ்மட்டமும் குளிப்பாட்ட இறங்கி வசூலித்து தானும் மஞ்ச குளிக்கும்..

உதாரணத்திற்கு டெல்லியிருந்து ஒரு துறை செயலாளர் ஒரு நகரத்திற்கு வருகிறார் என்றால், அவருடன் மத்திய, மாநில அதிகாரிகள் பட்டாளமும் கூடவே வரும். அவர்கள் அனைவரையும் அரசு கொடுக்கும் பணத்தில் மட்டுமே உபசரித்தால், பல்லுகூட விளக்கிவிட முடியாது, செயலாளரின் மனைவி ஒரு கடையில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு எதையாவது வாங்கினால், அங்கிருக்கும் ஏதோ ஒரு அதிகாரி, நீங்கள் போங்கள் மேடம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லவேண்டும். அதன்பி பில்லை செட்டில் செய்ய, ஒன்று கைக்காசை கொடுக்கவேண்டும்.  நாம ஏன் கொடுக்கவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை அவருக்கு வந்துவிட்டால், சக லஞ்சப்பேய் அதிகாரி அல்லது ஏதாவது ஒரு தில்லாலங்கடி தொழிலதிபரின் தலையில் கட்டிவிட்டுபோகவேண்டியதுதான்.

மாவட்ட கலெக்டர் விசிட் அடித்தால் தாசில்தார் கவனிப்பார், தாசில்தார் போனால் விஏஓ விழுந்து விழுந்து கவனிப்பார். வருவாய்துறை மட்டுமல்ல, போலீஸ், பொதுப்பணி, மின்சாரம், போக்குவரத்து, வணிகவரி என அரசின் எல்லாத்துறைகளிலும் இப்படித்தான் அதிகார மட்டத்தில் அந்தஸ்துக்கு ஏற்ப, குளிப்பாட்டல் என்பது லஞ்ச பணத்தில் நடந்துகொண்டே இருக்கும்.
கைநீட்டாத நேர்மையான அதிகாரிகள் என்றாலும், லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரியிடம், ‘’எப்பா அந்த செலவை நீ கொஞ்சம் பார்த்துக்குப்பா’’ என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டு ஓரம் நின்று மனம்புழுங்கியபடி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.
பேராசையோடு, ஊழல் அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் சமூக விரோதிகளும் இப்படி கொழுத்து திரிவதற்கு அடிப்படையில் பாதை அமைத்து தருபவவை எவை ? லஞ்சம் மற்றும் ஊழல்தான்… இந்த இரண்டும் கொடி கட்டி பறப்பதற்கு என்ன காரணம்? அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையும் நேர்மையும் இல்லாததுதான்.

அரசு அலுவலகத்தில் ஒரு விஷயம் சட்டப்படியும் விதிமுறைகளின் படியும் நடந்தால் எவன் எதில் புகுந்து எப்படி லஞ்சம் பெறமுடியும். எந்த காண்ட்ராக்ட்டில் எவன் கொள்ளையடித்துவிடமுடியும்? அரசு அலுவலகங்கள் அதன் பணியை நேர்மையாகவும் விரைவாகவும் செய்தால் அரசியல்வாதிகளுக்கு அங்கே என்ன வேலை? மக்களுக்கான திட்டங்களை அரசு அலுவலகங்கள் சரியாக செய்தால், கறை வேட்டிகள் ஏன் அங்கே மக்கள் குறை என எட்டிப்பார்த்து உதார்விடும் வேலையை செய்யப்போகிறது?

உலகத்திலேய அநியாயத்துக்கு மக்கள் சேவகன் என 24 மணிநேரமும் அரசியல் செய்துகொண்டிருக்கும் நம்மூர் அரசியல்வாதி களை கட்டுப்படுத்தவும், லஞ்ச அதிகாரிகளை ஒழிக்கவும் அரசு நிர்வாகத்தை அப்படியே வெளிப்படை தன்மையாக்க, சிஸ்டம் மாற்றம் என்பது மிகவும் அவசியம். காலத்தின் கட்டாயமும்கூட,

மேற்படி விஷயங்ளைத்தான் நடிகர் ரஜனி தனது வார்த்தைகளில் இப்போது சொல்கிறார். அவர் சொல்வதில் பெரும்பாலானவை நல்ல விஷயங்கள்தான் யார் இல்லை என்று சொன்னது ?.

ஆனால் சொல்லும் ரஜினி யார் என்பதும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் என்னென்ன பேசினார், பேசுகிறார் அவருடைய செயல்பாடுகள் என்னவென்பதை எல்லாம் பார்க்கும்போதுதான் நெருடலாக இருக்கிறது. உங்கள் கொள்கை என்னவென்று செய்தியாளர் கேட்டதற்கு, ஒரு நிமிடம் அப்படி தலை சுத்திப்போயிடிச்சி என்று சொன்ன மேதை அவர்.

தனது ஆதங்கத்தை இப்போது அவர், கொட்டும்முன் அரசியலுக்கு நான் வரவேமாட்டேன் , இருந்தாலும் என் எண்ணத்தை சொல்கிறேன் என்று சொல்லிருந்தால் அவரை பாராட்டியிருக்கலாம்.

இல்லை, நான் அரசியலுக்கு வந்துவிட்டேன், இதுதான் என் கட்சி இதுதான் என் கொள்கைகள் என்று மேற்படி விஷயங்களை சொல்லியிருந்தால் விண்ணே அதிரும்படி கைதட்டி வரவேற்றிருக்கலாம்.

ஆனால் என்ன செய்கிறார் ரஜினி? அவரிடம் எந்த இடத்தில் இருக்கிறது நேர்மை?

நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு என்று அவரே ஏற்பாடு செய்து அழைத்தார். வந்தார், சொற்பொழிவாற்றினார். கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தலை தெறிக்கஓடினார். இதுதான் ரஜினியின் தைரியமா?
இது திமிர்த்தனமா இல்லை கோழைத்தனமா என்பது அங்கு சென்ற செய்தியாளர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவின் புதிய அதிபர் முதன்முறையாய் என்ன பேசப்போகிறார் என்று வெள்ளிமாளிகைக்கு போன செய்தியாளர்களைவிட அதிக எதிர்பார்ப்போடு லீலா பேலசுக்கு போனவர்கள் அந்த செய்தியாளர்கள்தான்.

ரஜினி மட்டுமே பேசுவதற்கு, ஒரு அறிக்கை போதுமே, வீடியோ போதுமே. எதற்கு அவ்வளவு பில்டப்?

ரஜினி சொற்பொழிவில் டைரக்டர் ஷங்கர் படத்தில் வருகிறது மாதிரி, ஒரு நாளிலேயே ஜனங்க திருந்தி மனம்மாறி விற்பனை வரியை ஒழுங்கா கட்டி அதில் ஏகப்பட்ட பள்ளிக்கூடங்களை அரசாங்கம் திறக்கதிட்டமிடுகிறது மாதிரி, எவ்வளவு நெஞ்சை நக்கும் சீன்களுண்டான வரிகள்..

நடிகர் ரஜினி, எல்லா மாற்று அரசியலையும் சொல்லிவிட்டு ஆனால் களத்திற்கு வரமுடியாது என்று சொல்வதின் அர்த்தம், தனக்கு முதுகெலும்பே கிடையாது என்பதுதானே?

யோசித்து யோசித்து திட்டம்போட்டு ஆரம்பிப்பதற்கு அரசியல் கட்சி என்பது என்ன வருமானத்துக்காக தொடங்கப்படும் ஒரு கம்பெனியா? அரசியல் என்பது ஒரு உணர்வு. திடீரென்று நெருப்புப்பொறி மாறி வெளிப்பட்டு பெருகி அணையாமல் எரிவது. அது, தும்மல் விக்கல் மாதிரி தடுக்கமுடியாத, கட்டுப்படுத்தமுடியாத விஷயம். சமூக அக்கறையில் நான் இறங்கிவிட்டேன், என்னை தொடருபவர்கள் தொடரலாம் என்று சொல்லிக்கொண்டே செயலில் காட்டியபடி போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து மக்களை சந்தித்துக்கொண்டே இருப்பவன்தான் நிஜ அரசியல் தலைவன்.

ஆனால் நீங்களெல்லாம் போய் கடுமையாக உழைத்து மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்துங்கள். அந்த எழுச்சி என் கண்ணுக்கு தெரியும் அப்போது வருகிறேன் அரசியலுக்கு என்று சொல்லி டேபிளை தட்டுகிறார். உலகத்தில் அரசியலுக்கு வந்து சாதித்தவர்களில் யாராவது இப்படி லூசுத்தனமாய் பேசியிருக்கிறார்களா? உலக அளவில் தலைவர்களின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ‘’நான் நோகாமல் பயணிக்க பாதைபோட்டுத்தாருங்கள்’’ என்று கெஞ்சிய சோம்பேறி, யாராவது தென்படுகிறார்களா என..

தலைவர்களை உருவாக்கியதாக அறிஞர் அண்ணாவை புகழ்கிறார் ரஜினி,. அவர் அண்ணாவை எந்த லட்சணத்தில் படித்திருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே தெரிகிறது.

54 ஆண்டுகால ஆட்சியை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்கிறார். இதில் அண்ணாவின் ஆட்சி வராதா? சில மாதங்களுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சியை அமைப்பேன் என்று இதே ரஜினி உதார்விட்டாரே ஒழிய வேண்டியதில் அந்த எம்ஜிஆரின் ஆட்சி வராதா, நான் பெரிதும் மதிக்கும் கலைஞர் என்பாரே, அவரின் ஆடசி வராதா? இல்லை, அவர் வாயால் சொன்ன ‘தைரிய லட்சுமி’ ஜெயலலிதாவின் ஆட்சிதான் வராதா?

எல்லாரையும் புகழ வேண்டியது, அப்புறம் அவங்களோட ஆட்சி வரலாறு ஒழியவேண்டும் என்று சொல்லவேண்டியது. ரஜினிக்கு என்னதான் பிரச்சினை?

நானெல்லாம் சட்டமன்றத்தில் போய் பேசி, நினைத்துப்பார்க்கவே முடியவில்லை என்கிறார் ரஜினி. அப்பட்டமான உண்மை என்றே தெரிகிறது. அதெல்லாம் மக்கள் நலன், தைரியம், மூளை, சொந்தமாய் பேசத்தெரிந்தவர்கள் போகிற இடம் என்று காலம் காலமாய் பேசப்பட்டுவருபவை..

முதலாளி என்ற வகையில், தன் பேச்சு எடுபடுகிற இடத்தில் மட்டுமே அதிகாரம் செய்பவருக்கு சட்டசபையெல்லாம் கஷ்டமான காரியம்..

செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் நடந்த லீலா பேலஸ் ஒட்டல் சொற்பொழிவிலேயே பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக தெரியும். தனது பிரசங்கத்தின் இடையே, ஏதோ ஒரு வீடியோ கிளிப்பிங் ஓட ஏற்பாடு செய்திருக்கிறார் ரஜினி, அந்த வீடியோ திரையில் வர தாமதம் ஆகிறது.

உடனே எரிச்சலுடன், ‘ஏய் என்னாச்சு’ என்று கேட்டு வெடிக்கிறார். ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும், ஹீரோவின் அதே அதிகார தொணி, பொதுவெளியில், சுட்டுப்போட்டாலும் பொறுமை தனக்கு வரவே வராது என்பதை மறுபடியும் ரஜினி அப்பட்டமாக வெளிப்படுத்திய தருணம் அது.

சில படித்த இளைஞர்களுடன் சேர்ந்து திமுகவை தொடங்கி, பல துறைகளில் திறமை பெற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு 18 ஆண்டுகாலம், ஒரு நாள்விடாமல் அரசியல் களத்தில் தெருத்தெருவாய் ஊர்ஊராய் போய் பேசிப்பேசி ஓயாமல் போராடினார் அண்ணா. இரண்டு சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களையெல்லாம் எதிர்கொண்டார். அப்பேர்பட்ட அண்ணாவல், சொற்ப எம்எல்எக்கள் கொண்ட கட்சி, எதிர்கட்சி என வளர்ச்சிகண்டு அதன் பிறகே ஆளுங்கட்சியாக வெற்றிபெறமுடிந்தது.

நாட்டுக்கே சுதந்திரம் வாங்கித்தந்த காங்கிரஸ் கட்சியை மாநில ஆட்சியிலிருந்து முதன்முதலாய் அகற்றிய ஒரு மாநில கட்சியின் மாபெரும் தலைவன், ஆட்சி கையில் கிடைத்ததும் என்ன சொன்னான் தெரியுமா? காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவ்வளவு சீக்கிரம் மக்கள் நம்மிடம் ஆட்சியை கொடுப்பார்கள் என்று நினைக்கவேயில்லை’’

18 ஆண்டுகாலம் என்பது சீக்கிரம் என்று நினைத்து பயந்தார் அண்ணா, முதலமைச்சர் கனவே இல்லாமல் ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மீதுதான் அவருக்கு உண்மையான அக்கறை இருந்திருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன அது.?

ஆனால், தேர்தலை சந்தித்து வெற்றிபெற கட்சியே ஆரம்பிக்காமல் அரசியலுக்கு வராமல் நடிகர் ரஜினி சொல்கிறார், “நான் முதமைச்சராக மாட்டேன், படித்த, நல்ல மனிதர் ஒருவரை முதலமைச்சராக்குவேன்’’ என்று..

வேலையிலேயே சேராத துப்பில்லாத ஒருத்தன், ரிட்டயர் ஆகி கிடைக்கப்போற ஓய்வூதிய பலன்களை அப்படியே இன்னொருத்தனுக்கு குடுத்துவிடுவேன் என்று சொல்கிற மாதிரி இல்லையா இந்த காமடி?

மூலைக்கு மூலைபோய் மக்களிடம் எழுச்சியை உண்டாக்கவேண்டுமாம், ஆனால் அவர் மட்டும் கோடி கோடியாய் சம்பாதிக்க சினிமாவுக்கு நடிக்கப்போய் அவர் வேலையை கமுக்கமாக பார்ப்பாராம். என்ன மாதிரியான சுயநலம் இதெல்லாம்?

ஏன், தனது ரசிகர் மன்ற அடையாளங்களையும் செயல்பாடுகளையும் காட்டி தமது கொள்கைகளை விளக்கி பிரச்சாரம் வெற்றிபெறுகிற மாதிரி ரஜினியே ஒரு படம் நடிக்கலாமே? வேறு யாரும் தயாரிக்க தயங்கினால் சொந்த காசைப்போட்டு ரஜினியே தயாரித்து வெளியிட்டு எழுச்சியை உண்டாக்கலாமே.. இதைவிட வேற அருமையான வழி அவருக்கு என்ன இருக்கு?

ரஜினிக்கு உண்மையிலேயே மக்கள் நலன் இருந்தால், எழுச்சியை உண்டாக்க அவர் முதல் ஆளாய் கரடு முரடாய் கிடக்கும் களத்தில் தன்னை காட்டியிருக்கவேண்டும்.

இவ்வளவு பேசிவிட்டு படம் நடிக்கப்போகிறார் ரஜினி, யாருடைய படத்தில்? சன் பிக்சர்ஸ் படத்தில். சன் பிக்சர்ஸ் யாருடையது? அவர் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்போனால் இரண்டு அரக்கர்கள் ஒழியவேண்டும் என்று ரஜினி கூவுகிறாரே, அதில் ஒரு அரக்கனை சார்ந்ததுதானே..

நேர்மை நேர்மை என்று பேசுகிறாரே ரஜினி, அவரிடத்தில் என்ன நேர்மை கொட்டிக்கிடக்கிறது.? அரசாங்க விதிகளுக்கு ஆப்படித்துவிட்டு ரசிகன் தலையில் கொள்ளை விலையில் டிக்கெட்டை கட்டி கோடிகோடியாய் கொண்டுபோவதுதான் நேர்மையின் அடையாளமா?

71 வயது ஆகிவிட்டது, உடலில் என்னென்னவோ கோளாறுகள் இனி என்னால் ஆட்சியில் அமருவதையெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாது என்கிறார்..ஆனால் அதே வயது முதிர்ச்சியை திரையில் மறைத்துக்கொண்டு ஒப்பனைகளால் உருமாறி 25 வயது இளைஞனாக என்னென்னமோ ஜகஜ்ஜாலம் செய்கிறார் என்கிறார்கள் படத்தை பார்த்துவிட்டு விமர்சிக்கிறவர்கள்

லாஸ்ட் பட் லீஸ்ட்… ரிபீட்டு… ஒன்று அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சொல்லியிருக்கவேண்டும், கை தட்டியிருப்பார்கள். இல்லை வரவே மாட்டேன். இனி படங்களிலும் நடிக்கமாட்டேன் ஆனால் என் ஆசை இதெல்லாம் நிறைவேறவேண்டும் என்பதுதான் என் லட்சியம் அதற்காக ஒரு தனி மனித இயக்கமாய் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் அவரின் வெளிப்படை தன்மையையும் நேர்மையையும் பாராட்டி. கைத்தட்ட விண்ணைப்பிளக்க செய்யலாம்.

நடந்திருப்பது என்ன? பெரிய பெரிய அரசியல் கட்சிகளை பார்த்து உதார்விடுவது.. அரசியலுக்கு வருவேன் என்றும் சொல்வது. ஆனால் வராமல் இருக்க நாசூக்காய் அதற்கு ஒரு நிபந்தனையை வைத்து எல்லோரையும் விரட்டி விடுவது.

அதேவேளையில் படங்கள் நடிப்பதையும் நிறுத்தமாட்டேன் அதனால் ரசிகர்கள் பார்த்தே ஆகவேண்டும்., பச்சையாக சொன்னால் எந்த பக்கமும் தலையை ஆட்டமாட்டேன். இதுதான் ரஜினியின் நிலைப்பாடு…

பொதுவாக பயணிகள் முழுவதும் நிறைந்தால்தான் பேருந்தை எடுக்க விசில் அடிப்பேன் என்பது கண்டக்டர் புத்தி.
ஆனால் எஞ்சினும் டயர்களுமே இல்லாத பஸ்சை வைத்துக்கொண்டு, பயணிகள் வந்து எல்லோரும் ஏறிய பிறகுதான் விசில் அடிப்பேன் என்பது சொல்வது என்ன டைப் கண்டக்டர் என்பதே புரியமாட்டேன் என்கிறது.