பிரயாக்ராஜ்

டந்த 2005 ஆம் ஆண்டு அயோத்தியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

அயோத்தி நகரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ராம் ஜென்ம பூமி வளாகத்தினுள் தீவிரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு வேலியை மீறி உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு, கையெறி குண்டு ஆகியவைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.

இரு தரப்பினரிடையே சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. அந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்களில் இருவர் மரணம் அடைந்தனர். விசாரணையில் இந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது.

காவல்துறையினர் தாக்குதல் குறித்து வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பிரயாக் ராஜில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.  அரசு தரப்பில் இந்த வழக்கில் 63 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

அவர்களுடைய வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு 14 ஆண்டுகள் நடந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். மற்ற நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது