டில்லி : மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து நான்கரை வயது பெண் குழந்தை பலி

டில்லி

டில்லியில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கரை வயதுப் பெண் குழந்தை கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த்தில் குழந்தை மரணம் அடைந்தது.

டில்லி நகரில் சோனியா விகார் என்னும் பகுதியில் வசிக்கும் கிரீஷ் குமார்  என்பவர் தனத் நான்கரை வயதுப் பெண் குழந்தை இஷிகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் வீட்டின் அருகில் இருந்த அனுமார் கோவிலுக்கு அவர் சென்றுக் கொண்டிந்தார்.  மோட்டார் சைக்கிளில் குழந்தை இஷிகாவை முன்னே வைத்துக் கொண்டு கிரீஷ்குமார் சென்றுக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் காற்றாடிக்குப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் அறுந்து பறந்து வந்து இஷிகாவின் கழுத்தை அறுத்துள்ளது. மாஞ்சா நூலில் கண்ணாடி தூள், கோந்து உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு கடினமாக்கப்படுவது வழக்கம். இதனால்  குழந்தை இஷிகாவின் கழுத்தில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. பதறிப் போன தந்தை உடனடியாக இஷிகாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள மருத்துவர்கள் குழந்தை இஷிகா ஏற்கனவே மரணம் அடைந்துள்ளதைத் தெரிவித்தனர். இந்த சம்பவம்  குறித்து காவல்துறை வழக்குப் பதிந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

அரசு மாஞ்சா நூல் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடை செய்து அதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.