ரியாத்:

கத்தார் உடனுனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பக்கைரன், எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

தீவிரவாத தொடர்பு இருப்பதாக கூறி கத்தாருடனான ராஜாங்க உறவுகளை இந்த நாடுகள் கடந்த மாதம் துண்டித்தன. கத்தாருடன் உறவை புதுப்பிக்க இந்த நாடுகள் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. இ ந்நிலையில் கத்தாருடனான ராஜாங்க உறவுகளை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்த நாடுகள் அறிவித்துள்ளது.

இதற்கு ஏற்ப ‘‘பேச்சுவார்த்தைக்கு முன்பு தீவரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும். இதர நாடுகளின் வெளியுறவு கொள்கைகளில் தலையிட கூடாது’’ என்று பக்ரைன் வெளியுறவு அமைச்சர் சேக் காலித் பின் அகமது அல் கலிபா தெரிவித்தார்.

பக்ரைனில் நான்கு அரபு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். அப்போது கத்தார் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

சவுதி அரேபியா அமைச்சர் அதெல் ஆல் ஜூபைர் கூறுகையில், ‘‘ நாங்கள் விதித்த கட்டுப்பாடுகளை பரிசீலனை செய்து அதை பின்பற்ற கத்தார் தயாராக இருந்தால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் இது வரை இது தொடர்பான தெளிவான அறிவிப்புகளை கத்தார் வெளியிடவில்லை’’ என்றார்.

கத்தாருடன் உறவு முறிவை அமெரிக்கா முதலில் வரவேற்றது. ஆனால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட அதிபர் டிரம்ப் முயற்சி செய்துள்ளதோடு, சில புதிய ஒப்பந்தங்களையும் கத்தாருடன் ஏற்படுத்தியுள்ளார்.

ஈரான் உறவை துண்டிக்க வேண்டும். அல் ஜகீராவுக்கு தடை விதிக்க வேண்டும். கத்தாரில் உள்ள துருக்கி படைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை சவூதி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.