லக்னோ: ராமர்கோவில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்னர்.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக  ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜையும் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பெற்று கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அறக்கட்டளை வங்கி கணக்குகளில் இருந்து, முறைகேடாக பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தெரிய வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மோசடியில் ஈடுபட்டவர்  மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க முயன்றபோது இந்த சம்பவம் அம்பலமானது.  ​​இவ்வளவு பெரிய தொகைக்கான காசோலையில் கையெழுத்திடப்பட்டதா என ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் வங்கி மூத்த அதிகாரி தொடர்புகொண்டு தகவல் கேட்டபோது, அவர், அவ்வளவு தொகைக்கு கையெழுத்திடவில்லை என சம்பத் ராய் சொன்னதை தொடர்ந்து உடனடியாக பரிவர்த்தனை முடக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில், முறைகேடாக காசோலை மூலம் எடுக்கப்பட்ட பணம்,  மகராஷ்டிராவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. சுமார் ரூ.6 லடசம் வரை மோசடி நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக, பிரஷாந்த் மஹாவால் ஷெட்டி, சங்கர் சீத்தாராம் கோபாலே, சஞ்சய் தேஜ்ராஜ், விமல் லல்லா ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தமோசடியின் மூளையாக செயல்பட்ட நபர் இன்னும் தேடப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.