டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவிகிதம் குறைப்பு உள்பட 4 மசோதாக்கள்  தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக,  தடுப்பு செலவினங்களுக்காக, நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எம்.பி.க்களின்  சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு  ஏற்கனவே அறிவித்தது.  அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7ந்தேதி அவசர சட்டமும் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், அந்த அவசர சட்டத்துக்கு பதிலாக, பாராளுமன்ற மக்களவையில் ‘எம்.பி.க்கள் சம்பளம், இதர படிகள், ஓய்வூதியம் திருத்த மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது.  பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது,  மேலும்  ஓராண்டு காலத்துக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று கூறினார்.

அதுபோல ஏற்கனவே  வேளாண் துறை தொடர்பான 3 அவசர சட்டங்கள் ஏற்கனவே பிறப்பிக்கப் பட்டு இருந்தன.அவற்றுக்கு மாற்றாக, 2 மசோதாக்களை மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார்.

மத்திய உணவுத்துறை இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே ஒரு மசோதாவை  தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்த மசோதாக்கள், கூட்டாட்சி முறைக்கு விரோதமானவை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சவுகதா ராய் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பதில் அளித்து பேசிய  வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர்,  இந்த மசோதாக்கள், விவசாயிகள் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபட வழிவகுக்கிறது. விளைபொருட்களுக்கு குறைந் தபட்ச ஆதார விலை நிர்ணயித்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பலன் அடைவதில்லை. எனவே, இந்த மசோதாக்களின்படி, விவசாய மண்டியை தவிர்த்து, வேறு இடங்களிலும் விவசாயிகள் விற்கலாம். தாங்கள் விருப்பப்பட்ட முதலீட்டாளர்களிடம் விலை பேசலாம். இதன் மூலம் விவசாயிகள் பலன் அடைவார்கள். அதே சமயத்தில், குறைந்தபட்ச ஆதார விலை முறையும் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.