Random image

கேரள பாவ மன்னிப்பு பாலியல் விவகாரம்: ஒரு பாதிரியர் சரண் மற்றவர்கள் தலைமறைவு

திருவனந்தபுரம்:

பாவ மன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை  மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்ட பாதிரியார்களை கைது செய்யத் தடை இல்லை’ என்று கூறி முன்ஜாமின் வழங்க  கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், பாதிரியார் ஒருவர் காவல்துறையிடம் சரண் அடைந்துள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

கேரள மாநிலம் திருவல்லாவில், மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபையில்,மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண், தனது முந்தைய பாலியல் தவறுக்காக மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியார் ஜாப் மேத்யூவிடம் பாவ மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இதை தெரிந்துகொண்ட அந்த பாதிரியார்,  இதுகுறித்து அவரது கணவரிடம் தெரிவிக்காமல் இருப்பதாக சொல்லி அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். இதை சக பாதிரியார்களிடமும் மேத்யூ சொல்ல,  அடுத்தடுத்து மேலும் 4 பாதிரியாளர்கள் அந்த  இளம் பெண்ணை தங்களது இச்சைகளுக்கு மிரட்டி ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத் திடம் புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீது கேரள போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதனால் தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில்,  ஆப்ரகாம் வர்கீஸ், ஜோப் மேத்யூ, ஜாய்ஸ் கே ஜார்ஜ் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள உயர்நிதி மன்றத்தை அணுகினர். ஆனால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ, கொல்லம் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மற்ற 2 பாதிரியார்களும் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.