லக்னோ :

சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) பாய்ந்தது.

உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர் கபீல் கான். கடந்த ஜனவரி 29ம் தேதி மும்பையில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போது கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2019 இல் நடந்த குடியுரிமை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் விளைவாக அவரை கைது செய்து சிறையிலடைத்தது உ.பி. அரசு.

கைதை எதிர்த்து ஜாமீன் கோரிய டாக்டர் கபீல் கானுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஜாமீன் வழங்கிய நிலையில், பல்வேறு காரணங்களை காட்டி இதுவரை விடுவிக்கப்படாமல் இருந்துவருகிறார் .

இந்நிலையில், தற்போது யோகி அரசு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கை பதிவுசெய்து, அவரின் விடுதலையை கேள்விக்குறியாகியுள்ளது.

குழந்தை நல மருத்துவரான டாக்டர் கபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள்  ஆக்சிஜன் இல்லாமல் இறந்ததை 2017 ல் வெளிஉலகிற்கு கொண்டுவந்து பின் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.