கன்னியாகுமரி:

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரியில் 4 பேர் உயிரிழந்தனர்.


தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு புயல் சின்னமாக மாறியது. வங்கக்கடலில் உருவாகி உள்ள ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. சூறைக்காற்றுக்கு மின்கம்பங்களும் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. நேரம் செல்லச் செல்ல சூறாவளி காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.

இதனால் நள்ளிரவில் இருந்தே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின. விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் பெருமளவு சாலைகளில் விழுந்து கிடந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தொடர் மழையுடன் வீசிய சூறைக்காற்றில் பெரும்பாலான பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மீனவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கனவே விசைப்படகு மற்றும் வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

நேற்று இரவு முதல் வீசிய பலத்தக்காற்றினால் குமரி கடல் கொந்தளிப்புடன் காட்சி அளித்தது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. பலத்த மழைக்கு ஒரே நாளில் மட்டும் மரம் விழுந்து ஒரே நாளில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது