நான்கு பேரை காயப்படுத்தி நிற்காமல் சென்ற மத்திய  அமைச்சரின் வாகனம்

பெங்களூரு

த்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே வின் வாகனம் பெங்களூருவில் நான்கு பேரை காயப்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேவனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.30 மணிக்கு மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே விமானநிலையத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார்.   அப்போது சாலையில் ஒரு பள்ளம் இருந்ததை கவனித்து வாகனத்தை ஓட்டுனர் திருப்பி உள்ளார்.   அதே நேரத்தில் ஒரு குரங்கு அந்த சாலையின் குறுக்கே சென்றுக் கொண்டிருந்துள்ளது.   அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் பிரேக்கை அழுத்தி உள்ளார்.

அதனால்  அந்தக் கார் தனக்கு முன்னே சென்ற டொயோட்டா இனோவா காரில் மோதியது.   அதைக் கண்ட அமைச்சரின் பாதுகாப்பு வாகனமும் சட்டென்று தங்கள் வாகனத்தை நிறுத்தவே  பின்னால் வந்த வாகனங்கள் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியதில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டன.

இதனால் ஒரு வாகனத்தில் உள்ள ஒரு பெண்ணும் இரு குழந்தைகளும் காயம் அடைந்தனர்.    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒரு இளைஞர் கீழே விழுந்ததால் அவருக்கு கையில் எலும்பு முறிந்தது.   ஆனால் அமைச்சரின் வாகனமும்,  பாதுகாப்பு வாகனமும் நிறுத்தப் படவில்லை.   வேகமாக விமானநிலையம் நோக்கி சென்று விட்டது.

இதை நேரடியாக பார்த்த சந்திரசேகர் என்பவர், “இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுவது தினசரி வழக்கம் தான்.   ஆனால்  தனது வாகனத்தால் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவ முன் வராமல் அமைச்சர் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.   அமைச்சரோ அவர் பாதுகாவலர்களோ யாருமே உதவிக்கு வரவில்லை.   மாறாக அவரது பாதுகாவலர்கள் அமைச்சர் விமானத்தில் கிளம்பிச் சென்று ஒரு மணிக்குப் பின்னர் இங்கு வந்தனர்.    மக்களுக்கு விபத்து ஏற்படுத்திவிட்டு இப்படி ஓடிச் செல்வது மிகவும் தவறானது”  எனக் கூறி உள்ளார்.

நேற்று இரவு அமைச்சரின் கார் ஓட்டுனர் மீது விஸ்வநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது.   இது குறித்து விசாரித்து வருவதாக காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.