தமிழ்நாட்டில் மேலும் 4 பேருக்கு புதியவகை கொரோனா வைரஸ் தொற்று!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு, புதியவகை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தன்னை தன்மை மாற்றிக்கொண்ட புதியவகை கொரோனா வைரஸ், பிரிட்டனில் முதன்முதலாக கண்டறியப்பட்டு, அங்கு பரவிய நிலையில், உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. அங்கிருந்து திரும்பிய இந்தியர்களுக்கும் அந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்திலும் வெளியிலிருந்து வந்தவர்களின் மூலமாக அந்த வைரஸ் ஊடுருவியது. தற்போது, கூடுதலாக 3 பேருக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 44 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட நிலையில், 4 பேருக்கு புதியவகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 8 பேருக்கு நெகடிவ் முடிவு வந்த நிலையில், 32 பேருக்கு இன்னும் முடிவு தெரியவில்லை.

தொற்று கண்டறியப்பட்ட நபர்களுக்கு, அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்கள் நலமாக இருப்பதாயும், அதேசமயம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாயும் கூறப்பட்டுள்ளது.