நாகப்பட்டினம்:
ழிப்பறை கட்டிக்கொள்ள வசதியில்லாத தங்கள் வகுப்புத் தோழனுக்கு தாங்களே சொந்த முயற்சியில் நிதி திரட்டி கழிப்பறை கட்டிக்கொடுத்து சாதித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள்.

இந்த அதிசயம்  நடந்தது தமிழ்நாட்டில்தான், நாகபட்டிணம் மாவட்டத்தில் உள்ள தேதாகுடி என்ற ஊரில் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வசீகரன், ராகுல், நவீன்ராஜ் மற்றும் ஹரீஷ். இவர்களது வகுப்புத் தோழன் அகத்தியன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பள்ளிக்கு வரமுடியாமல் போவது இவர்களை ரொம்பவே கவலைக்குள்ளாகியிருக்கிறது.
அகத்தியன்  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவனாக இருந்தபடியால் அவனது வீட்டில் கழிப்பிட வசதியில்லாததே அவனது உடல்நலக்குறைவுக்குக் காரணம் என்பதை நண்பர்கள் கண்டறிந்தனர்.  தனது நண்பனின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று விரும்பிய அவர்கள்  தாங்களே ஒரு திட்டத்தை வகுத்தனர். அதன்படி அகத்தியன் குடும்பத்துக்கு கழிப்பறை கட்டுவதற்கான நிதி திரட்டும் பணி பள்ளியில் ஆரம்பமானது.
போதுமான நிதி திரண்டவுடன் கட்டுமானப் பணிக்கு ஆகும் செலவை குறைக்க மாணவர்களே களத்தில் இறங்கி கொத்தனாராகவும் சித்தாளாகவும் மாறினர். விளைவு வெகு விரைவிலேயே ஒரு நல்ல கழிப்பறை அகத்தியனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தயாரானது.
இவர்களது பணிக்கு உற்றதுணையாகவும் ஊக்கமாகவும் விளங்கியவர் ஆசிரியர் வீரமணி. தனது மாணவர்கள் சுகாதர வசதிகளின்மையால் படும் கஷ்டங்களைக் கண்ட ஆசிரியர் அவர்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வைத் தரும் ஊர்வலத்தையும் சுதந்திர தினத்தன்று நடத்தி வீடுகளில் கழிப்பறை கட்டிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை கிராமத்து மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
எதிர்கால இந்தியாவைக் குறித்த நம்பிக்கையை இன்னும் நமக்கு தருவது இதுபோல ஆங்காங்கே சாதித்துக்காட்டும் தன்னலமற்ற இளைய சமுதாயமும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தும் நல்லாசிரியர்களும்தான்.