தேக்குமரம் பதுக்கல் விவகாரம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஊழியர்கள் 4பேர் பணி நீக்கம்

திருவாரூர்:

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தேக்குமரம் பதுக்கப்பட்டது தொடர்பாக,  திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஊழியர்கள் 4பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

திருவாரூரில் உள்ள மத்திய  பல்கலைக்கழகத்தில் தேக்கு மரம் பதுக்கி வைக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் விசாரணைகுழு அமைக்கப்ப்ட்டு விசாரணை நடை பெற்று வந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தேக்கு மரங்கள் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடைய தற்காலிக பணியாளர்கள் தீனா மற்றும் கோபி ஆகியோருடன், இச்சம்பவத்திற்கு தொடர்புடைய தற்காலிக காவலாளிகள் சிவராமகிருஷ்ணன், முருகேசன் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக,  துணை பதிவாளர் வேலுவிடம் விசாரணை நடைபெற்று வரு கிறது. அவரிடமிருந்த 5 பதவிகளை பறித்து வேறு நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தன்னிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த பிரச்சினையில்,  வனத்துறை அதிகாரிகளுக்கு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவத  ஈடுபட்டது தெரிய வந்தால், அவர்கள்  உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள், மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.