அகமதாபாத்

வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த ரவுடியை குஜராத் மாநில தீவிரவாத தடை காவல் பிரிவின் நான்கு பெண் காவலர்கள் பிடித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனாகட், ராஜ்கோட், மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பல கொலை கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களை ஜுசாப் அல்லாரக்கா சந்த் என்பவன் செய்து வந்தான். இவன் மீது மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்து வந்தான்.

கடந்த வருடம் ஜூன் மாதம் இவன் மனைவி இறந்து விட்டதால் இறுதிச் சடங்குகள் செய்ய பரோலில் வெளி வந்தான். ஆனால் அவன் அச்சமயத்தில் தப்பி விட்டான். அஙனுடைய கூட்டாளியை கொன்ற ஜீவன்பாய் சங்கானி என்பவனை ஜுசாப் கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான். குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடை பிரிவை சேர்ந்த காவலர்கள் தேடி வந்தனர்.

அந்த பிரிவில் நான்கு பெண் உதவி ஆய்வாளர்கள் இருந்தனர். அவர்கள் பெயர் சந்தோக் ஒடிதாரா, நித்மிகா கோஹில், அருணா கமேதி, மற்றும் சகுந்தலா மயி ஆகியோர் ஆகும். அவர்களுக்கு போதாத் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஜுசாப் தலை மறைவாக இருந்தது தெரிய வந்தது. அதை ஒட்டி அவர்கள் அந்தப் பகுதியில் நுழைந்து அவனைப் பிடித்து கைது செய்துள்ளனர்..

பெண் காவலர்களின் இந்த துணிகர செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.